October
2021.
This article is in Tamil – furnished by Dr. R Natraj, IPS – DGP, Commissioner of Police Chennai and Chairman - TNPSC
https://en.wikipedia.org/wiki/R._Nataraj
Thank you, sir, for your implicit response to my request to
write an article for us. The information is succinct and plain and is easy for
comprehension for any reader. Your knowledge and outlook are an inspiration.
Please accept a token of appreciation for all your support, motivation and the
amount of time and dedication you have offered.
Here is a featured article about human-interest,
with evocative stories and an alignment to a strong ‘trending issue’, with a harmonized research base.
The
article is a effective and a purposeful piece underpinning the current
situation in question, Which puts people at the heart of the ongoing events and
situation.
The
author has analysed the behavior of the present young generation, quoting
Thirukkural, about the use and power of words, while gradually transcending
into Article 41 of the Indian Constitution - Article 41 - right to work,
education, and public assistance for the elderly, among others, and the
Importance of Strengthening Care and Support Systems for Older Persons and
allied Government initiatives.
The
article ends with a poem from “Kurunthogai “– written around 3rd Century BCE,
under Ethuththokai and a prominent and influential Mahakavi Bharathi's poem.
Jai Hind and Happy reading.
- P Radhika Ravi, Madurai
சிகரம் தொடு
இளமையில் முழுமை முதுமையில் முதிர்ச்சி
‘இளமை என்றென்றும் இனிமை ‘
‘இளமையே உன்னை ஆதரிக்கிறேன்’
என்று இளமை பருவத்தை கவிஞர்கள் போற்றுகிறார்கள். இளமை பருவம் ஒரு ஒளிக்கீற்று போல் மறைந்து விடும். அதற்குள் நமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்லியல்புகளை படிமானமாக பழக்கத்தில் கொண்டுவர வேண்டும். நாம் பழகும் விதத்திலும் பேச்சிலும் நாம் கற்றுக்கொண்ட பண்புகள் வெளிப்பட வேண்டும்.
கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்று இனிய சொல் வளர்த்தல் இன்னாதவை தவிர்த்தலை வள்ளுவர் வலியுறுத்துகிறார் . ஆனால் நடைமுறையில் கெட்ட வார்த்தைகள் நாரசாரமாக ஒலிக்கும் சொற்களை கூசாமல் பேசுகிறார்கள். அதுவும் நல்லவர் போல் இப்போது வேஷம் போடும் இளம் அரசியல் வாதிகள் தேர்தல் களத்தில் பேசிய பேச்சு அநாகரிகத்தின் உச்சம் எனலாம். திரைப்படங்களில் இன்னும் மோசம். அம்மாவை ‘கிழவி’ என்பது, பெரியவர்களை
“பெரிசு’ என்று கேலி பேசுவது, தகாத வார்த்தைகளில் திட்டும் வசனங்கள், பெற்றோரை அடிப்பது போன்ற காட்சிகள் ஏதோ யதார்த்தத்தை காண்பிப்பது போல இயக்குனர் மார் தட்டி கொள்வார் ! இதில் கொடுமை என்னெவென்றால் அம்மாதிரி படங்களுக்கு அரசு விருது, ஹீரோவிற்கு தேசிய சிறந்த நடிகர் விருது தரப்படுகிறது! சமுதாயத்தை சீரழிக்கும் காட்சிகள் அங்கீகாரம் பெறுகின்றன, மேலும் அழிவிற்கு வித்திடுகின்றன!
இளஞர்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் பொறுப்போடு வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்.
பெரியவர்களுக்கு மரியாதை செய்தல் , எல்லா ஜீவராசிகளிடம் அன்பு பாராட்டுதல், பெண்களிடம் கொளரவத்தோடு நடந்து கொள்ளுதல், கனிவான பேச்சு , சட்ட திட்டங்களை மதித்தல், எதிர்மறையான விமர்சனங்களை தவிர்த்தல் இவையெல்லாம் ஒருவரின் தோற்றத்திற்கு பொலிவூட்டும் அணிகலன்கள்.
இந்தியாவின் ஜனத்தொகை 132 கோடி. அதில் 65% இளைஞர்கள், சுமார் 70 கோடி. உலகில் சைனா, இந்தியாவிற்கு அடுத்து ஜனத்தொகை மிகுந்த நாடு அமெரிக்கா. அதன் ஜனத்தொகை 40 கோடி மட்டுமே. இந்தியாவின் இளைஞர்கள் ஜனத்தொகையில் பாதி அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகை! அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் சராசரி வயது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அமரிக்காவில் தொழிலாளர்களில் நான்கில் ஒருவர் 55 வயதுக்கு மேற்பட்டவர்.
மருத்துவ வசதிகள் பெருகியுள்ளதால் ஆயுள் எதிர்பார்ப்பு 33 நாடுகளில் சராசரி 80 வயதாக உயர்ந்துள்ளது. 21 ம் நூற்றாண்டின் ஜனத்தொகை கண்ணோட்டத்தில் சராசரி மக்களின் வயது முதிர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை முதியவர்களுக்கான உரிமைகளை முன்னிறுத்தி அவற்றை அனுசரிக்க வேண்டிய அவசியத்தை அறிவுறுத்தியுள்ளது. உலகில் இப்போது சுமார் 11 சதவிகிதம் , 70 கோடி மக்கள் 60 வயதை கடந்தவர்கள். வரும் காலத்தில் 2050 ம் ஆண்டு இது 22சதவிகிதமாக உயரும். மனிதகுலத்தின் சரித்திரத்தில் முதன்முறையாக 60 வயதை கடந்தவர்கள் குழந்தைகளை விட அதிகமாக இருப்பார்கள்! அறுபது வயது கடந்தவர்களில் பெண்கள் அதிகமாகவும், எண்பது வயது கடந்தவர்களில் ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளனர் என்று ஐ நா ஆய்வறிக்கை கூறுகிறது. உலக ஜனத்தொகையின் வயது முதிர்வு சமுதாய பொருளாதார வளர்ச்சியில் பிரதிபலிக்கும். வயதானவர்களின் மருத்துவ தேவைகள், பாதுகாப்பு பிரச்சனைகள், அவர்கள் தாங்கக்கூடிய வேலை பளு, ஊதியம், பணியில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அளிக்கப்பட வேண்டிய நிவாரணம் அவர்களது ஓய்வூதிய நிர்ணயம் போன்ற தொடர் பிரச்சனைகள் சமாளிக்கப்பட வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் வருங்கால முதியவர்கள் என்பதால் முதியவர்கள் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு அவசியம். தெற்கு கிழக்கு ஆசிய நாடுகள் கொரியா , ஜப்பான், வியட்னாம், போன்ற நாடுகளில் முதியவர்கள் கொண்டாடப்படுகிறார்கள், அவர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுகிறது. நமது நாட்டிலும் அந்த கலாச்சாரம் உண்டு ,60 , 80 வயது பூர்த்தி விழா எடுக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் அதுவும் மறைந்து வருகிறது.
வயதானவர்களுக்கு முக்கிய பிரச்சனை பாதுகாப்பு. அவர்கள் வாழ்நாளில் உழைத்து சேர்த்து வைத்த பணம், சொத்தை பாதுகாப்பதே பெரும்பாடாகி விடுகிறது. வாடகைதார்கள் வாடகை பாக்கி, உரிய நேரத்தில் காலி செய்வதில்லை, மோசமான பராமரிப்பு என்று வயதான காலத்தில் பல சோதனைகள். சில குடும்பங்களில் வாரிசுகளே சொத்தை பிரித்து கொடுக்க சண்டையிடுவது வீதி வரை வந்து விடுகிறது. சாதாரண குடும்பம் பணக்கார குடும்பம் என்ற பாகுபாடின்றி எல்லா குடும்பங்களிலும் சொத்து தகராறு காவல் நிலையம், நீதிமன்றம் என்று அல்லோலப்படுகிறது.
2011 ம் வருடம் தூத்துக்குடியில் 84 வயதாகிய சிலுவை என்பவரும் அவரது 80 வயது மனைவி அருளம்மாள் தங்களது மகனும் மருமகளும் அவர்களது வீடுகள் நகைகளை அபகரித்து விட்டு நிராதரவாக ஒதுக்கி விட்டார்கள் என்று வழக்கு தொடர்ந்தார்கள். பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் கீழ் வழக்கு பதியப்பட்டது. 2007 ம் வருடம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் மாநிலங்களில் அமலாக்கத்திற்கு வந்தது. இந்தியாவில் இந்த சட்டத்தில் முதலில் பதியப்பட்ட வழக்கு தமிழ் நாட்டில் என்பதில் பெருமைப்படுவதா வருத்தப்படுவதா?
மேற்கு வங்காளம் பாரக்பூர் என்ற இடத்தில் 70 வயது மூதாட்டி தெருவில் கசங்கிய உடை சிறிது உணவோடு அவதிப்படுவதை பார்த்து நல்லுள்ளம் படைத்தவர்கள் அவரை மீட்டனர். சோகம் என்னவென்றால் அவரது மகன் மருமகள் தாயாரை நடுத்தெருவில் விட்டுவிட்டு விடுமுறை கழிக்க சென்றுவிட்டனர். மகனுக்கு கெட்ட பெயர் வந்து விடுமென்று தாயார் ஒன்றும் சொல்லாமல் தெருவில் முடங்கியது தெரியவந்தது . இன்னொரு நிகழ்வில் ஒரு பெண் தனது மாமியார் அனுமதியின்று தோட்டத்தில் பூ பறித்தார் என்று அடித்து துவைத்த காட்சி அண்டை வீட்டினர் எடுத்த வீடியோவில் பதிவாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது நடந்ததும் மேற்கு வங்காளத்தில்.
குடும்பங்களால் கைவிடப்பட்ட விதவைகள் காப்பகம் அதிகமாக உள்ள மாநிலங்கள் மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம் . இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய கொடுமை நிகழ்கிறது , ஐம்பது சதவிகிதத்திற்கும் மேல் கவனத்திற்கு வராமல் போகிறது, முதியோர்கள் மொளனமாக சகித்துகொள்கின்றனர் என்பது தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஏழ்மை ஒரு கொடிய நோய். முதுமையில் ஏழ்மை என்பது கொடூரம். கிராமங்களில் ஓரளவிற்கு பெரியவர்கள் பராமரிக்கப் படுகிறார்கள். நகரங்களில் தான் நிலமை மோசம். தகாத வார்த்தைகளால் வசவு, கண்ணியமாக நடத்தபடுவதில்லை,
அடிப்படை வசதிகள் மறுப்பு போன்ற எண்ணற்ற புகார்கள். இன்னொரு கொடுமையும் உண்டு. பங்காளி சண்டையில் கொலை நிகழ்ந்தால் குடும்பத்தில் உள்ள பெரியவரை பழியை சுமக்க செய்து விடுவார்கள். அவரும் குற்றம் ஒப்புகொண்டு சரணடைவார். கொலை வழக்கு கண்டுபிடிக்கப்பட்டது என்று காவல்துறையும் குற்றபத்திரிகை தாக்கல் செய்வார்கள்.
அரசியல் சாசனத்தில் 41 ம் பிரிவில் முதியோர் பாதுகாப்பு, அவர்கள் வாழ்க்கை சீராக அமைய அரசு எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று கொள்கை வழிகாட்டுதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்
முதியோர் ஊதியம், மருத்துவ காப்பீட்டு திட்டம், அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் அட்டை மூலம் பெறுவது, முதியோர் இல்லம் போன்ற பல நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுகின்றன.
முதியோர் பெற்றோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் பெற்றோர்களை பராமரிப்பது வாரிசுகளின் கடமை என்றும் தவறினால் நடவடிக்கை எடுக்க முடியும். சரக உட்கோட்ட அதிகாரி தலமையில் அமைக்கப்படும் தீர்ப்பாயம் முன் வழக்கு பதிவு செய்யலாம். விசாரணைக்குப்பிறகு உடனடி நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும் பெற்றோரை பராமரிக்க மாதம் ரூ பத்தாயிரம் வரை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் ஆணையிடலாம். 90 நாட்களில் வழக்கு முடிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தில் உள்ள முக்கிய பிரிவு.
பெற்றோரை பாதுகாக்க வேண்டியர் மகன் ,மகள் , தத்தெடுத்த பிள்ளைகள் , குழந்தைகள் இல்லாத பட்சத்தில் சட்டப்படி வாரிசு உரிமையுள்ளவர்கள். பெற்றோரை ஏமாற்றி சொத்து பரிவர்த்தனம் செய்யப்பட்டிருந்தால் அது இந்த சட்டப்படி செல்லாது மீண்டும் பெற்றோருக்கே சொத்து சென்றடையும். நிராதரவாக பெற்றோரை தவிக்க விட்டால் சம்பந்த பட்ட பொறுப்பாளருக்கு மூன்று மாத தண்டனை, 5000 அபராதம் விதிக்கப்படும். இரு ஒரு சமூக நல சட்டம். காவல்துறையும் , சமூக நல துறையும்,வருவாய் துறையும் இணைந்து செயல் பட வேண்டும்.
சென்னை மாநகர காவல்துறை முதியவர்கள் பாதுகாப்பிற்காக,ரோந்து வாகனங்கள் பகல் இரவு நேரங்களில் அனுப்புதல், மேலும் அவர்கள் கொடுக்கக்கூடிய புகார்களை அவர்கள் இருப்பிடம் சென்று பெறுதல் போன்ற சீரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். மாநகர கட்டுப்பாட்டு அறையில் இதற்காக பிரத்யேக தொலைபேசி இணைப்பு உள்ளது.
இல்லங்களில் எல்லோரும் பரஸ்பரம் இனிமையாக பழகி அன்பு பகிர்வது அவசர உலகில் மறைந்து வருகிறது. முகம் தெரியாதவரிடமெல்லாம் பவ்யமாக பேசுபவர் வீட்டில் அடாவடித்தனமாக கடுஞ்சொல் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?
“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’.
என்ற குறுந்தொகை பாடல். அன்புடைய நெஞ்சங்கள் கலந்துதான் நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகமாக உருவாகிறது. குடும்பத்திற்கு ஆணிவேர் பெற்றோர் முதியோர் . அவர்களது ஆசீர்வாதத்தால் அவர்கள் தோள்மீது பரந்த உலகை பார்க்கும் பாக்கியம் பெற்றோம் என்பதை மறக்கலாகாது.
இதையே பாரதியார் அழகாக அறிவுறுத்துகிறார்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
வாயுற வாழ்த்தேனோ-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? 1
ஜெய் ஹிந்த் !
வெல்க பாரதம்
!
வாழ்க தமிழ்திரு
நாடு !
என்று வீட்டையும் நாட்டையும் நேசிப்போம்!
https://copspeak.wordpress.com/about/
https://www.linkedin.com/in/nataraj-ips-former-dgp-tamilnadu-chairman-tnpsc-a5623911/
https://www.deccanchronicle.com/nation/current-affairs/140216/retired-dgp-seeks-doctorate-in-
community-policing.html
Comments
Post a Comment